Tuesday, January 10, 2012

புரிதல்


அவன் அவளை ஒரு விருந்து மண்டபத்தில் சந்தித்தான்.
மிகவும் அழகாக இருந்தாள்.
அங்கிருந்த பல இளைஞர்கள் அவளையே கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், அவன் மிக அமைதியாக ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தான்.
அவனை யாரும் சட்டை செய்யவில்லை.

விருந்து முடியும் நேரம்.
அவன் அவளிடம் சென்றறான்.
இருவரும் சேர்ந்து தேநீர் அருந்தலாமா என்று கேட்டான்..
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டாள்.

இருவரும் ஒரு தேநீர் விடுதிக்குச் சென்றனர்.
தேநீர் வந்தது. எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கனத்த அமைதி. நிமிடங்கள் மௌனமாக நகர்ந்தன.
அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது.
வீட்டுக்கு புறப்படலாமா...
அவள் கேட்டாள்.

சட்டென்று அவன் தேநீர் விடுதி பணியாளரை அழைத்தான்.
சிறிது உப்பு கிடைக்குமா...
காபியில் கலந்து குடிக்கத் தேவைப்படுகிறது..


பக்கத்து மேஜைகளில் அமர்ந்திருந்தவர்கள் திடுககிட்டுப் போனார்கள்.
காப்பியோடு உப்பா... அவர்கள் கண்களில் குழப்பமும் அதிர்ச்சியும் இருந்தது.

அவனுக்கும் முகம் சிவந்தது.
அமைதியாக பணியாளர் கொடுத்த உப்பை காபியில் கலந்து குடிக்கத் துவங்கினான்.

அவள் குழப்பத்துடன் கேட்டாள்.
இந்தப்பழக்கம் எப்போது முதல் உனக்கு உள்ளது...

அவன் சொன்னான்.
நான் சிறுவனாக இருந்த போது கடற்கரையோரத்தில் குடியிருந்தேன்.
எனக்கு கடலில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அப்போது கடலில்
‘உள்ள உப்புநீரை ரசித்துக்குடிப்பேன். இந்த உப்புக்காப்பி போல.
நான் எப்போதெல்லாம் இப்படி உப்பைக் கலந்து குடிக்கிறேனோ
அப்போதெல்லாம் எனது சிறுவயது நினைவுகள் வந்துவிடும்
என் சொந்தஊர் ஞாபகங்கள் என்னைச் சுற்றும்.
இப்போதும் அங்கு என் பெற்றோர் உள்ளனர்.
அவர்களைப் பிரிந்து இருப்பது எனக்கு வேதனையளிக்கிறது...

அவன் கண்களில் ஈரம்.

அவளுக்கும் மனம் கனத்தது.
வீட்டைப்பிரிந்து வாழ்வதற்காக வருத்தப்படும்
அவனை நினைத்து நெகிழ்ந்து போனாள்.
இவனைப்போல வீட்டை நேசிப்பவர்கள்,
வீட்டில் உள்ளவர்களையும் குடும்பத்தையும் நேசிப்பவ்ர்கள்,
நிச்சயம் பொறுப்பானவர்கள்.
உறவுகளை பாதுகாக்கும் அக்கறை கொண்டவர்கள் என்று எண்ணிக்கொண்டாள்.

தொலைவில் உள்ள தனது சொந்த ஊர் அனுபவங்களை அவளும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள். சிறுவயது அனுபவங்கள், குடும்ப உறுப்பினர்கள் வரை அவளது பேச்சு நீண்டது.

இருவருக்கும் இடையில் மெல்லிய நட்பு பூக்கத் தொடங்கியது.
இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.
இத்தனை மனிதாபிமானமிக்க ஒருவனை, அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு மனிதனைத்தான் அவள் தன் வாழ்க்கைத் துணையாக தேடிக்கொண்டிருந்தாள்.
இந்த நட்பு கிடைத்ததற்காக உப்புக் காப்பிக்கு அவள் நன்றி கூறிக்கொண்டாள்.

பிறகு அவர்கள் நட்பும் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
நீண்டகாலம் இருவரும் மனமொத்த தம்பதிகளாக
அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
எப்போதெல்லாம் காபி தயாரிக்கிறாளோ, அப்போதெல்லாம் தனியாக ஒரு கோப்பையில் உப்பு கலந்து அவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தாள்
அவன் விரும்புவான் என்பதற்காக.

நாற்பது வருடங்கள் உருண்டோடியது.
ஒருநாள் அவன் இறந்து போனான்.
அப்போது அவளுக்காக அவன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான்.

“அன்பே. என்னை மன்னித்து விடு...
வாழ்நாள் முழுவதும் பொய்கூறியதற்காக என்னை மன்னித்துவிடு...
ஆனால் இந்த ஒரு பொய்யை மட்டுமே,
நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன்..
உனக்கு நினைவிருக்கிறதா.. நாம் முதன் முதலாக சந்தித்தபோது நான் அருந்திய உப்புக் காபி...
அப்போது... உன்னுடன் அமர்ந்த அந்த நிமிடங்களில்... நான் தடுமாறிப் போயிருந்தேன்...
உண்மையில் நான் எனது காபிக்கு சர்க்கரைதான் கேட்க நினைத்தேன்..
ஆனால் வாய் குழறி உப்பை கேட்டுவிட்டேன்..
அதை மாற்றிக் கேட்க நினைத்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.
அதையே குடித்துவிட்டேன்.
நிச்சயம் அந்த உப்புக்காப்பியால் நமக்குள் உறவு உருவாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்று பல சமயங்களில் நான் நினைத்திருக்கிறேன்.
ஆனால், எதற்காகவும் பொய் சொல்லமாட்டேன் என்று உன்னிடம் நான் சத்தியம் செய்திருந்ததால் பேசாமல் இருந்துவிடுவேன்.

இப்போது நான் இல்லை. இனியும் உன்னிடம் மறைக்க விரும்பவில்லை..
உண்மையை சொல்கிறேன்..
எனக்கு உப்புக்காப்பியே பிடிக்காது. அப்பப்பா... என்ன ஒரு மோசமான சுவை..
என்னால் குடிக்கவே முடிந்ததில்லை..

ஆனால், அதை என் வாழ்நாள் முழுவதும் குடித்தேன்.. உன்னை சந்தித்த நாள் முதல் நான் எதற்காகவும் மனம் வருந்தியதில்லை. என்னை அத்தனை மகிழ்ச்சியாக வைத்திருந்தாய்.. உன்னுடம் வாழ்ந்த நாட்கள் அத்தனை அற்புதமானவை.

மீண்டும் ஒரு பிறவி இருந்தால், நிச்சயம் உன்னுடனேயே வாழ ஆசைப்படுகிறேன்.. என் வாழ்நாளை உனக்காகவே அர்ப்பணிக்க விரும்புகிறேன்... மீண்டும் அந்த உப்புக்காப்பியைக் குடிக்க வேண்டியிருந்தாலும்... ”

கடிதத்தை படித்து முடித்த போது அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.

சிலதினங்கள் கழித்து அவளிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

உப்புக்காப்பியின் சுவை என்ன...

அவள் கூறினாள்...
.

இனிப்பு..“




காதல் என்பது மன்னித்தல்.
காதல் என்பது புரிந்துகொள்ளுதல்.,
காதல் என்பது கவனித்தல்.
காதல் என்பது கையைப் பற்றிக்கொள்ளுதல்

No comments:

Post a Comment